1.அவ்வையார்( தமிழ்ப்பற்று):
அவ்வையார் தன் தமிழ்ப் பற்றால் திருமணம் புரிய விரும்பாமல் விநாயகப் பெருமானின் அருளால் தன் இளமைப் பருவத்தைத் துறந்து முதுமையை அடைந்தார் என்பது திரைப்படங்களின் வாயிலாக அறியப்படும் உண்மை. நடந்தே ஒவ்வொரு ஊருக்கும் சென்று தன் தமிழ்ப் புலமையால் தமிழ்ப் பாட்டுக்களைப் பாடி மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதியமான் தனக்கு கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் அதை அவ்வையாருக்கு குடுத்தார். இதிலிருந்து அவ்வையாரின் பெருமை விளங்கும். இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், விநாயகர் அகவல் போன்ற பலப் பாடல்களை எழுதியுள்ளார். உயிர் எழுத்துக்களை வரிசைப்படுத்தி இவர் எழுதிய ஆத்திச்சூடியால் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் அதிகம் இடம் பிடித்து உள்ளார்.
2.அன்னைத் தெரசா( சமூகத் தொண்டு):
1910 ஆகஸ்ட் 26ம் தேதி மெஸிடோனியாவில் அன்னை தெரஸா பிறந்தார். சிறுவயதிலேயே ஆழ்ந்த இறைபக்தியும்,பொதுத் தொண்டில் ஆர்வமும் கொண்டவர். வெள்ளை நிறத்தில் நீல கரை உடுத்தி சேரிவாழ் மக்களுக்கும், அநாதைகளுக்கும், தொழுநோயாளிகளுக்கும், அவர் செய்த தொண்டுகள் அளப்பறியன. சுமார் நாற்பத்தி ஐந்து வருடங்கள் சமூகப் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடும்,தன்னம்பிக்கையோடும் செய்தார். தொழுநோயாளிகளுக்காக அவர் பெரிதும் பாடுபட்டார். அவர் செய்த தொண்டுகளுக்காக அவருக்கு 1962- பத்மஸ்ரீவிருது, 1979- நோபல் பரிசு, 1980-பாரத ரத்னா விருது, 1983-பிரிட்டீஷ் மகாராணியின் கவுரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தன. 1997ல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இவருக்கு அமெரிக்காவின் கவுரவ பிரஜை உரிமை அந்தஸ்தை வழங்கி கவுரவித்தார். தனக்கு பரிசாக வந்த எதையும் ஏலம் விடுத்து அதில் கிடைத்த பணத்தை அறக்கட்டளையில் சேர்ப்பது இவரின் இயல்பு. தன் வாழ்நாள் முழுவதும் எள்ளளவும் தன்னைப் பற்றி நினைக்காமல் சமூகத் தொண்டிற்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட அன்னைத் தெரசா இன்றும் உலக மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இவர் பெண் இனத்திற்கே பெருமை சேர்த்து விட்டவர்.
3.ஜானசி ராணி லட்சுமி பாய்( வீரம்):
ஜான்சி ராணி லட்சுமிபாய் 1835 ல் பிறந்தார். வீரம் என்றால் அது ஜான்சி ராணி என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர். இவரின் இயற்பெயர் மணிகர்ணிகா. சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். குதிரைஏற்றமும், வாள் வீச்சும் நன்கு கற்றார். அந்நாட்களில் வெகுவிரைவில் திருமணம் செய்துவிடுவர். ஜான்சியை ஆண்ட கங்காதர் என்பவரை 1842 ல் மணம்புரிந்தார். அவர் பட்ட துன்பங்கள் பல! தன் சொந்த வாழ்வில் குழந்தை, கணவனையும் இழந்தாலும் மனம் தளராது இரும்பு உள்ளம் கொண்டு தான் தத்து எடுத்த தாமோதர் என்ற தனது உறவினரின் குழந்தையை தனக்குப் பின்னால் குதிரையில் கட்டிக்கொண்டு நமது நாட்டிற்காக வெள்ளையர்களுடன் போராடினார். தனது படைவீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடன் மிகத் துணிச்சலுடன் போர் புரிந்தார். 1858 –ம் வருடம் ஜூன் மாதம் 17ம் தேதி போர் முனையில் காயம் அடைந்து வீர மரணம் அடைந்தார். அப்பொழுது அவருக்கு வயது 22 மட்டுமே! வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவானபோது அதற்கு ஜான்சிராணி படை என்றுப் பெயரிட்டார்.
இதிலிருந்து அவர் பெருமை விளங்கும்.
4.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: (பெண்களுக்காகப் போராடியவர்).
பெண்களுக்கு கல்வி எதற்கு? என்ற காலக்கட்டத்தில் பிறந்தவர் முத்துலட்சுமி ரெட்டி.இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் என்ற ஊரில் 1886ல் பிறந்தார். இவருக்கு இரண்டு தங்கைகள், ஒருத் தம்பி. ஆரம்பத்தில் திண்ணைப்பள்ளியில் படித்த இவர் மெட்ரிக்குலேசன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மாணவி, ஒரே மாணவி இவர் ஆவார். அரசின் உதவித் தொகையில் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண்,சட்டசபையில் அங்கம் வகித்த முதல் பெண், இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்த ஒரேப் பெண் என்ற பல பெருமைகளைக் கொண்டவர். இவர் அனாதைக் குழந்தைகளுக்கு அவ்வை இல்லம் அமைத்தார்.புற்று நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் அடையாறு புற்று நோய் மருத்துவமனை அமைத்தார். 1925 –ல் சட்டசபைத் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் பெண்களுக்காக தேவசாசிமுறை ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம், பால்யவிவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தார். இவர் பத்மவிபூஷன் விருது பெற்றவர்.
5.திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி( சங்கீதம்):
எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்கள் 16,1916 ல் பிறந்தார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு,வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருத மொழி, குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராக சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் தன் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளார்.இவர் சங்கீத கலாநிதி-1968,மகசேசே பரிசு-1974, பத்மவிபூஷன்-1975 , நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது- 1990, பாரத ரத்னா- 1998. போன்ற பல விருதுகளை தன் இசைப் பணிகளுக்காகப் பெற்றார். நம் வீட்டில் அன்றாடம் கேட்கும் இவர் பாடிய வெங்கடேச சுப்ரபாதம், பஜகோவிந்தம் போன்றவை புகழ்பெற்றவை.
6. டாக்டர் பத்மாசுப்ரமணியம் ( நடனம்):
இயக்குனர் கே.சுப்ரமணியம், மீனாட்சி தம்பதியருக்கு கடைக்குட்டி இவர் ஆவார்.அம்மா மீனாட்சி ஒரு இசைக் கலைஞர் ஆவார். இவரை மயிலாப்பூர் எழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் கற்க அனுப்பினார்கள். இவர் ஆடாத உலக மேடைகள் இல்லை எனலாம். இவரின் தந்தை 1942ல் ஆரம்பித்த நடனப்பள்ளி நிருத்யோதயா இவரின் அயராத உழைப்பால் 70ம் ஆண்டை அடிஎடுத்து வைத்திருக்கிறது.
நடனத்தில் புதுமை விரும்பியான இவர் ரஷ்ய மியூசிக் கம்போசர் ஒருவரின் இசைத் தொகுப்பில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி ராமாயண ஜடாயு மோட்சத்தை ரஷ்யாவில் நடத்திக் காட்டிய போது நடனப் பிரியர்கள் ஆனந்தத்தில் மிதந்தனர். இது அவருடைய நடனத் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
ஐம்பது ஆண்டுக்காலமாக தன் வாழ்நாளை நாட்டியற்திற்காகவே அர்ப்பணித்தார்.
இவருக்கு பாடலுக்கு இசைஅமைத்தல், ஆராய்ச்சிசெய்தல் போன்ற பல திறமைகள் உண்டு. இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி விருது உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன.
7. கவிஞர் சூடாமணி (எழுத்தாளர்):
ஜனவரி 10,1931-ல் பிறந்த இவர் ஏராளமான சிறுகதைகளையும்,புதினங்களையும் எழுதியுள்ளார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக்கதிர், கல்கி, விகடன் என்று எல்லாப் பத்திரிக்கைகளிலும் சூடாமணி எழுதியுள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்றப் பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதை காவேரி என்றப் பெயரில் 1957ல் பிரசுரம் ஆனது. இருவர் கண்டனர் என்ற இவரது நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற சூடாமணி அவர்கள் ஆரவாரம் இல்லாமல் மிக எளிமையாக, மத்திய தர வாழ்கையையும், அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார்.இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை தமது நான்காவது ஆசிரமம் என்ற சிறுகதைக்காகப் பெற்றார். இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதம் பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார்.
8.மேடம்க்யூரி( அறிவியலுக்கான நோபல் பரிசுப் பெற்றவர்):
ரேடியம், பொலோனியம் போன்ற கதிர் வீச்சு மூலகங்களை கண்டுப்பிடித்தார் மேரிகியூரி. 1896ல் இவர் தொடங்கி வைத்த கதிர்வீச்சு ஆராய்ச்சி மருத்துவத் துறையில் மகத்ததாக இன்றளவும் போற்றப்படுகிறது.
இவர் போலந்து நாட்டில் 1867ம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி தன் குடும்பத்தின் ஐந்தாவதுக் குழந்தையாகப் பிறந்தார். இவர் தந்தை இயற்பியல் ஆசிரியர். அன்னை ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை. அதனாலேயே இவருக்கு தன் தந்தையைப் போலவே இயற்பியலில் அதிக ஆர்வம் கொண்டார். அதிக வசதி இல்லாத தனது குடும்ப சூழ்நிலையால் பல சிரமங்களுக்கு நடுவே இவரது கல்விப் பருவம் தொடர்ந்தது. 1893 ல் முதல் மாணவியாக எம்.எஸ்.சி இயற்பியலில் தேர்ச்சி பெற்றார். அடுத்த ஆண்டு எம்.எஸ்.சி கணிதத்தில் தேர்ச்சி பெற்றார். தன் வாழ்நாள் முழுவதையும் ஆராய்சிக்காகவே செலவழித்தார்.
இவர் பியூரிக் கியூரியை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து ரேடியத்தைக் கண்டுப்பிடித்தனர். இவருக்கு நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, இரு தடவை நோபல் பரிசுப் பெற்ற ஒரே ஒருப் பெண் மற்றும் விஞ்ஞானத்தின் பல்வேறுத் துறைகளில்( இரசாயனம், இயற்பியல் )நோபல் பரிசுப் பெற்ற ஒரே ஒரு நபர் எனும் மூன்று பெருமைகள் உண்டு. மேலும் இவரது மகள் ஐரின் கியூரியும் 1935 ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று நோபல் பரிசை பெறுவது இவர் குடும்பத்திற்கே சாத்தியம். இதுவரை இதனை யாரும் முறியடிக்கவில்லை என்பது அவருக்கு மிக பெருமைச் சேர்க்கிறது.