அந்த வீட்டின் முன்னால் இருந்த மரம் நன்றாக
வெட்டப்பட்டு இருந்தது. என்ன நடேசா நான் ரெண்டு நாள் ஊருக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள ஏன் இப்படி மரத்த வெட்ட வீட்டீங்க? ஏன் இப்படி பண்ணினீங்க?
என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்கும் அப்பாவைப் பார்க்கும் போது மனதிற்கு என்னவோப்
போல் இருந்தது.
அப்பா அடுத்த நாள் பக்கெட்டில் நிறையத் தண்ணீர்
கொண்டு வந்து அதற்கு ஊற்றினார். என்னங்க இப்படி ஊத்தறீங்க? மழை வேறப் பெஞ்சிக்கிட்டு
தானே இருக்கு என்று அலுத்தபடி சித்ரா உள்ளே செல்ல என் மனம் கனத்தது.
அன்று மரம் நடும் விழாவை நினைத்துக் கொண்டேன்.
என்ன பாலு எத்தன மரக்கன்னு வந்திருக்கு? ஒரு ஐந்நூறு இருக்கும்! சரி! சரி அதல்லாம்
எங்க எங்க நடணும்னு யோச்சி வெச்சிட்டீங்களா?
அதல்லாம் பக்காவா யோச்சிவெச்சிட்டோம் என்று பாலுவும், முருகனும் ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பித்தனர்.
கொஞ்ச நேரத்தில் விழா ஆரம்பிக்க யேய்! பாலு! ஏ! இன்னமும் சாப்பிடாம இருக்க! இந்தா ரெண்டு இட்லி!
ஒன்னும் சாப்படாம வந்திட்டேன்னு அம்மா என் கையில குடுத்து விட்டுச்சு! என்று என் அத்தை
மகள் பூங்கொடி அந்த பொட்டலத்தை என் கையில் குடுத்தாள். நான் அவசர அவசரமாய்
அவள் குடுத்த இட்லியை என் வாயில் திணித்துக் கொண்டேன்.
முதல் கன்றை அந்த
அதிகாரி நட, எங்கள் தெருவெங்கும் மரக் கன்றுகள் நடப்பட்டன. நான் முருகன் என்னைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு ஒவ்வொன்றாக நட ஆரம்பித்தோம். எங்கள் வீட்டின் முன்னால் நாங்கள் கன்றினை எடுத்து வந்ததும் ஒரு நிமிஷம் பாலு இத நானும் நீயும் சேந்து நடலாமா! என்று பூங்கொடி சொல்ல பாலு சரி என்றான். டேய் இந்தாடா தண்ணி! என்று தாய் மரகதம் சொல்ல இருவரும்
சேர்ந்து அந்த கன்றினை நட்டனர்.
மழைக் காலத்தில் நட்டதால் கன்றுகள்
பிழைத்துக் கொண்டன. என்ன பாலு! உனக்கும் பூங்கொடிக்கும் எப்ப கல்யாணம்? அதான் உனக்கு
அவ! அவளுக்கு நீன்னு எப்பவோ முடிவுப் பண்ணிட்டாங்க இல்ல! என்று ஒரு நண்பன் ஆரம்பிக்க!
இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம் என்று பாலு வெட்கத்தில் தலையை கவிழ்த்திக் கொண்டான்.
என்ன சார்! என்ன சொல்றீங்க? என்று தெருமுனையில் பூங்கொடியின் அப்பா நல்லக்கண்னு யாருடனோ
பேசிக் கொண்டு இருந்தார். சில நிமிடங்களில் தலையில் அடித்துக் கொண்டு ஓட நானும் நண்பர்களும்
விரைந்தோம். பக்கத்தில் உள்ள பிரதான சாலையின் ஒரு ஓரத்தில் மக்கள் மொய்த்துக் கொண்டு இருக்க எல்லாரையும் விலக்கிக்
கொண்டு நான் முன்னேற என் பூங்கொடி தலையில் இரத்தம் சொட்டியபடி பிணமாகி இருந்தாள்.
ஒரு வாரம் கழித்து.. என்னங்க இங்க வந்துப் பாருங்க!
என்று என் மனைவி சித்ரா தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி வாசலுக்கு இழுத்துச்
சென்றாள். அங்கே வெட்டப்பட்ட மரம் அழகாய் துளிர்த்து வரத் தொடங்கி இருந்தது. பக்கத்தில்
இருந்த கட்டிடத்தில் நாளை மரம் நடும் விழா
துவக்கி வைப்பவர் மாவட்ட செயலாளர்.திருமதி.
பூங்கொடி அவர்கள் என்ற அறிவிப்பு பலகை என்னைப் பார்த்து சிரித்தது.