வாசு தேவ அய்யங்கார் பன்மாடிக்குடில்
திருச்சி திருவானைக்காவலில் கல்லணைக்கு செல்லும் இருவழிச் சாலைக்கு எதிர்ப்புறம் உள்ள எங்கள் சி.கே.வி.ஐ என்னும் வாசுதேவ அய்யங்கார் பன்மாடிக்குடில் அமைந்துள்ளது. எங்கள் வளாகத்தை அழகிய மரங்களும் , மாருதி விநாயகர் ஆலயமும் , குழந்தைகள் விளையாடும் சிறுவர் பூங்காக்களும் அலங்கரிக்கின்றன.
இங்கு சி.கே.வி.ஐ. என்னும் நலச்சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் தலைவர் , உபதலைவர் கொண்ட ஆறு முதல் பத்து உறுப்பினரைக் கொண்டக் குழு ஒவ்வொரு வருடமும் இங்குள்ள வளாகவாசிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த வளாகத்தின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபடுகின்றனர். மேலும் , இங்குள்ள ஒவ்வொரு பிளாக்கிற்கும் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் . அவர் அந்த பிளாக்கின் குறைகளைத் தீர்ப்பார். சி.கே.வி.ஐ நலச்சங்கத்தால் எங்கள் வளாகத்தின் தூய்மைமையை மேம்படுத்த எக்ஸ்னோரா இயக்கமும், இங்குள்ள வீடுகளில் ஏற்படும் குழாய் ,மின்வேலை மற்றும் இதர தேவைகளை கவனிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுளனர். மேலும் வளாகத்தின் பாதுகாப்பிற்காக இரவு மற்றும் பகல் நேரக் காவலர்கள் , மாதத்தில் ஒரு தடவை ஒவ்வொரு பிளாக்கின் தண்ணீர்தொட்டியை தூய்மைப்படுத்த ஆட்கள் நியமிக்கப்பட்டும் வளாகத்தின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
மேலும், எங்கள் வளாகத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ந்து விளையாடும் வகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அதில் ஊஞ்சல்களும், சறுக்கி விளையாட சறுக்குமரங்களும் அமைக்கப்பட்டுள்ளன
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மாதர் சங்கம்
எங்கள் வளாகத்தில் பதினைந்துப் பேர்க்கொண்ட ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மாதர் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது . இவர்கள் திருச்சியிலுள்ள சாந்திவன் என்னும் மனம் குன்றியக் குழந்தைகளுகாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பிற்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்கின்றனர். மேலும் சென்னையில் அடையாறு புற்றுநோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட மாதா டிரஸ்டிற்கு தங்களால் ஆன பொருள் உதவியினை மனம் உவந்து செய்கின்றனர். மேலும் மச்சுவாடி ,மற்றும் மனையேறிப்பட்டி போன்ற இடங்களில் உள்ள குஷ்டநோயாளிகளுக்கு எங்கள் வளாகத்தில் உள்ளோரின் ஒத்துழைப்பாலும் மாதர் சங்கத்தின் மூலமும் ஆடைகள் மற்றும் பொருள் உதவியையும் செய்கின்றனர் . அகில இந்திய வானொலிநிலையத்தில் இருந்து வருடா வருடம் எங்கள் அகிலாண்டேஸ்வரி மாதர் சங்கத்தில் உள்ளோரை பங்குப் பெற அழைகின்றனர் . நாடகம், இசைப்பாடல், சமையல் குறிப்பு ,உரையாடல் ,மற்றும் வினாடி-வினா போன்ற நிகழ்ச்சிகளில் மாதர் சங்கத்தில் உள்ளோர் பங்குக்கொள்கின்றனர்.
மேலும் இவர்கள் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகளில் திருவிளக்குப் பூஜைகள் சிறப்பாக நடைபெறும் . கோவிலின் அருகில் அமைந்துள்ள புற்றுமாரியம்மனுக்கு மாதப் பொங்கல் வைக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைப்பெறும்.
சமூக விழாக்கள்
எங்கள் வளாகத்தில் அகிலாண்டேஸ்வரி மகளிர் மன்றத்தின் சார்பாக குழந்தைகள் தினவிழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும்.
இங்குள்ளக் குழந்தைகளுக்கு ஓவியம், பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும் மேலும் போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்தும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் சுதந்திர தினவிழா, குடியரசுத் தினவிழாவையும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
பெண்கள் தினவிழா
அகிலாண்டேஸ்வரி மகளிர் மாதர் சங்கத்தின் சார்பாக பெண்கள் தினவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
பெண்கள் தினவிழா சென்ற வருடம் 16.04.2011 அன்று எங்கள் வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னதாக மார்ச் 13ம் தேதி சிறுவர் ,சிறுமியர்களுக்கும், மகளிருக்கும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் எங்கள் வளாகத்தில் நடைப்பெற்றன.முன்னதாக இதில் சிறுவர் -சிறுமியர்களுக்கு இசைநாற்காலி, சாக்குஓட்டம், அதிர்ஷ்டசுற்று , நீர்நிரப்புதல், எலுமிச்சை கரண்டி, அலங்காரம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன.
பெண்களுக்கு இசை நாற்காலி, பந்து உருட்டுதல், நீர் நிரப்புதல், அதிர்ஷ்டச் சுற்று ,நொண்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
அனைத்து மகளிர் அமைப்பிக்களின் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் திருமதி ஜென்பகா ராமக்கிருஷ்ணன் அவர்கள் 16.04.2011 அன்று எங்கள் வளாகத்தில் நடைப்பெற்ற பெண்கள் தினவிழாவிற்கு தலைமைத் தாங்கினார். அவர் குத்து விளக்கேற்றி ,மரக்கன்றினை நட்டு பெண்களின் உரிமைப் பற்றி சிறப்பு உரை ஆற்றினார். பின்பு விழாவில் வளாகத்தில் உள்ள பெண்கள் நாடகம்,மற்றும் பட்டிமன்றம் ,போன்றவற்றில் பங்கேற்றனர். சிறுவர் சிறுமிகளின் நடனம் நடந்தது.மார்ச் 13ம் தேதி நடைப்பெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டன.மேலும் பெண்கள் தினவிழாஅன்று நடைப்பெற்ற பரிசு குலுக்கலில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு பெண்கள் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ மாருதி விநாயகர் ஆலைய ஆஸ்திக சமாஜம்
எங்கள் வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ மாருதி விநாயகர் ஆலைய ஆஸ்திக சமாஜத்தில் மொத்தம் இருபதுப் பேரைக் கொண்டக் குழு ஆன்மீகப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இவர்கள் சார்பாக அஷ்டபதி பஜன் கோவில் வளாகத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைப்பெறும்.
மேலும் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் தனுர்மாத பஜனை அதிகாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணிவரை ஸ்ரீமாருதி விநாயகர் ஆலயத்தில் நடைப்பெறும்.
அப்பொழுது பஜனை ,திருப்பாவை, திருவெம்பாவை ,தேவாரம் ,திருவாசகம் ,இசைப் பாடல்கள் பாடுதல் போன்றவை நடைப்பெறும் . தனுர்மாத பஜனையில் எல்லா நாட்களிலும் பங்கு பெறும் குழந்தைகளுக்கு பரிசுகள் அளிக்கப்படும்.
மேலும் சத்சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு இதன் மூலம் இதன் மூலம் விஷ்ணு மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் , கந்தர் ஷட்டி கவசம் , அரவிந்தர் தியானம் (வியாழக்கிழமைகளில்) , மற்றும் அம்மாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அபிராமி அந்தாதி பாராயண வழிபாடுகளும் நடைப்பெறும்.
ஆன்மீக விழா
ஆன்மீக விழாவிற்கு எங்கள் வளாகத்தில் நடைப்பெற்றுவரும் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இங்குள்ள எங்கள் ஸ்ரீ மாருதி விநாயகர் ஆலயத்தின் ஆஸ்தீக சமாஜத்தின் சார்பாக இதுவரை ஒன்பது வருடங்களாக இந்த மஹோத்ஸவம் மிக சிறப்பாக நடந்து வருகின்றது . எங்கள் வளாகத்தில் உள்ள அனைவரும் தங்களால் ஆன ஒத்துழைப்பைத் தருவர் .
ஸ்ரீராதாகல்யாண மஹோத்ஸவம்
இந்த மஹோத்ஸவம் ஆனது ஒவ்வொரு வருடமும் தைமாதத்தின் கடைசிவாரத்திலோ அல்லது மாசி மாதத்தின் முதல் வாரத்திலோ நடைப்பெறும். இதற்கு முன்னதாக உஞ்சவ்ருத்தி நடைப்பெறும் . பின்பு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் ஆனது நான்கு நாட்களாக நடைப்பெற்று இனிதே முடிவுறும் . முதல் நாள் கணபதி ஹோமத்திலிருந்து துவங்கி இரண்டாம்நாளில் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம், மாலை அகிலாண்டேஸ்வரி மாதர் சங்க இன்னிசை நிகழ்ச்சி முதலியன நடைப்பெறும்.
ஒவ்வொரு வருடமும் மூன்றாம் நாள் பிரதான பிரபல பாகவதரைக் கொண்டு கீதகோவிந்தம் ,அஷ்டபதி பஜன், பின்பு பஞ்சபதி ,பூஜை போன்றவை காலை முதல் பகல் வரை நடத்தப்படும். பின்பு மாலை அஷ்டபதி பஜன் தொடர்ச்சி, பஞ்சபதி ,பூஜை , திவ்யநாமம், டோலோத்ஸவம் நள்ளிரவு வரை நடைப்பெறும்.
நான்காம் நாள் ஸ்ரீராதா கல்யாணமஹோத்சவம். காலை சம்பிரதாய உஞ்சவிருத்தி –சீர் கொண்டு வருதல் நடைப்பெறும். பின்பு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நண்பகல் வரை மங்கள ஹாரத்தியுடன் நிறைவடையும். அன்று மதியம் சிறப்பு அன்னதானமும் நடைப்பெறும். மேலும் அன்று மாலை ஸ்ரீஆஞ்சனேயர் உத்ஸவத்துடன் ஸ்ரீராதா கல்யாணமஹோத்சவம் இனிதே நிறைவுறும். இந்த முறை எங்கள் வளாகத்தில் நடக்கவிருக்கும் பத்தாவது ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமிகளின் சிஷ்யர் ஸ்ரீ சட்டநாதபாகவதர் அவர்கள் நடத்திக் கொடுக்க இசைந்துள்ளார்கள் என்பதை எங்கள் ஸ்ரீ மாருதி விநாயகர் ஆலைய ஆஸ்திக சமாஜத்தின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறாக எங்கள் வாசுதேவ அய்யங்கார் பன்மாடிக்குடில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகின்றது.
Very good katturai and very nice.
ReplyDelete