இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் தசரா எனப்படும் நவராத்திரியும் ஒன்று . அம்பாள் ஊசி முனையில் ஒன்பது நாட்கள் தவம் இருந்து மஹிசாசுரன் என்கிற அரக்கனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் இந்த ஒன்பது நாட்களும் ஒரு திருவிழாவாகவே மக்கள் கொண்டாடுகின்றனர். வீட்டில் ஐந்து படிகள் அல்லது மூன்று அல்லது ஏழு படிகள் அவர் அவர் வசதிற்கேற்ப வைப்பர். முதல் படியில் மரப்பாச்சி பொம்மை எனப்படும் மரத்தினால் ஆன பொம்மையை வைப்பர். மேலும் பூங்காக்கள் , அலங்கார விளக்குகள் போன்றவற்றை வைப்பர். இரணடாம் படியில் கல்யாண பொம்மை வகைகள்,, தசாவதாரம், போன்றவற்றை வைப்பர், மூன்றாம் படியில் செட்டியாரின் பலசரக்கு கடை போன்றவற்றை வைப்பர். பார்வதி. இலட்சுமி, சரஸ்வதி போன்றோரின் பொம்மைகளும் கொலுவில் முக்கியமாக இடம்பெறும். முதல் மூன்று நாட்கள் அம்பாளை பார்வதியாகவும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் பாவித்து வழிபாடு நடத்துவர். இந்த ஒன்பது நாட்களும் சுமங்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் , மஞ்சள் , குங்குமம் ரவிக்கைத்துண்டு , சுண்டல் போன்றவைகளை வைத்து தருவர். கன்னியா பெண்கள் எனப்படும் பருவம் எய்தாப்பெண்களுக்கு வஸ்திரத்தோடு . வளையல், பொட்டு, போன்ற அலங்காரப் பொருட்களும் வைத்து தருவர். இந்த ஒன்பது நாட்களும் நாம் பெண்களுக்கு தரும் பொருட்கள் நமக்கு நூறு மடங்கு பலன் தரக்கூடியது ஆகும். சரஸ்வதி பூஜை அன்று கல்வி நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் பூஜை போடுவர். வாகனங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்வர். மைசூரில் இந்த ஒன்பது நாட்களும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். நவராத்ரியின் பத்தாவது நாளான விஜயதசமி அம்பாளுக்கு மஹிசாசுரனோடு போர் தொடுத்து வெற்றி பெற்ற நாள் ஆகும். அன்று வித்யாரம்பம் என்று சொல்லக்கூடிய குழந்தைகள் முதன் முதலில் கல்வி கற்கும் நாள் ஆகும். மேலும் அன்று புதியதாக கர்நாடக சங்கீதம் கற்றல், பரதநாட்டியம் போன்ற கலைகளை முதன் முதலாய் கற்க மிகச் சிறந்த நாள் ஆகும்.
No comments:
Post a Comment